ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்
குருதேவர் எங்களிடம் எந்த நூல்கள் படிக்க உகந்தது, எது படிக்க உகந்ததல்ல என்பது பற்றி ஆலோசனை கூறினார்.
"இங்கு நிறைய பேர் நமது மார்க்கத்துக்கென்றுள்ள நூல்களை ஒதுக்கிவிட்டு பிறருடைய நூல்களை முடிவில்லாமல் படிக்கிறர்கள். மற்ற மதமார்க்கத்தினர் நூல்களை படிப்பதற்கு நம்மிடம் இல்லாதது என்ன உள்ளது அவற்றில்? ஆன்மீக போதனையில் கலப்படம் கூடாது. அப்படி அதிகம் செய்தால் அது ஒருவகை 'ஆன்மீக விபசாரத்தைப்' போன்றது. பலவகை போதனைகளால் மனம் நீர்த்துப் போய்விடும், அதனால் அது மிக விரைவில் குழப்பமடையும்.
"இங்கு ஆஸ்ரமத்தில் சிலநாள் முன் ஒரு பெண்மணி வாழ்ந்து வந்தார். அவர் பிறருடைய போதனைகளை எந்நேரமும் படித்து வந்தார். அவர் பழகுவதற்கு மிக நல்லவர், எப்பொழுதும் பிறருக்கு உதவியாகவும், எல்லோரிடமும் இன்முகத்துடனும் இருந்து வந்தார். நான் அவரிடம் பலமுறை 'ஏன் நீங்கள் உங்களுக்கான போதனைநூல்களை படிக்கக் கூடாது' என்று வினவியதுண்டு.
"'ஓ, எல்லா போதனைகளும் ஒரே விஷயத்தைத்தானே கூறுகின்றன' என்று அப்பெண்மணி மறுத்துப் பதிலளிப்பார்.
"நான் சொன்னேன்:
'அது உண்மை தான், ஆனால் எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் குழப்பமடைவதும் உறுதி. அந்த போதனைகளினூடே உள்ள உண்மையை ஓர்த்து உள்ளத்தினுள் உணரவேண்டும். அதற்குப் பின்னரே அந்த மெய்யுணர்விலிருந்து அவையெல்லாம் ஒன்றுதான் என்ற தெளிவு ஏற்படும்.
அதுவரை இப்படிப் படிப்பது, ஒரு நதியை நீங்கள் இரு படகில், ஒவ்வொன்றிலும் ஒரு காலை வைத்து, கடக்க முயல்வது போல் ஆகும். படகுகள் விலகிச் செல்லும் போது, அவற்றிடையே கீழே விழுந்து மூழ்க நேரிடும்.
போதனைகளுக்கிடையே சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அம் முரண்பாடுகளுக்கிடையே உள்ள ஐயத்தை நீக்கித் தெளிவுற, மெய்ஞ்ஞானத்த்தால் மட்டும் தான் முடியும். மெய்யுணர்வற்ற மனங்களுக்கு, அம்முரண்பாடுகள் மேலோட்டமாக இருந்தபோதிலும், அவை குழப்பத்திற்கு ஏதுவாக அமையும்.'
"அவர் நான் கூறிய புத்திமதியை ஏற்காமல் பல்வித நூல்களைப் படிப்பதையே தொடர்ந்தார். சில நாட்களுக்குப் பின், அவர் வழிதவறிச் சென்றுவிட்டார்.
"மக்கள் ஒரே பாதையில் விசுவாசத்துடன் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்." என்று அவர் கூறினார்,
#Conversations with Yogananda 111 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment