Thursday, October 1, 2015

085

ஓம் சத்குரவே சரணம்

துறவறம் பற்றிப் பேசுகையில், குருதேவர்,

"நீ கடவுளுக்காக உண்மையில் இந்த உலக இன்பங்களைத் துறந்தாய் என்றால், ஏசு கிறிஸ்து சொன்னது போல, நீ நூறு மடங்காக உண்மையான இன்பத்தைப் பெறுவாய். 

அதே போல, அவர் கூறிய படி மற்றவர்களால் நீ துன்புறுத்தப் படுவதும் உறுதி. யாருக்கும் இதிலிருந்து விதிவிலக்கு கிடையாது. கடவுள் தன் பக்தன் தன்மேல் உள்ள பக்தியில் ஸ்திரமாக உள்ளானா என்பதை உறுதி செய்து கொள்ள, இது ஒன்றுதான் வழி. 

ஒருவன் உலக வழிகளை ஒதுக்கிவிட்டு, ஆன்மீக பாதையை மேற்கொள்ளும் போது, அவன் உலகத்தின் வெறுப்பைச் சந்திக்கத் தயங்கக் கூடாது."

என்று கூறினார்.

‪#‎Conversations‬ with Yogananda 085 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

039

ஓம் சத்குரவே சரணம்

"எல்லா பிரபஞ்சமும் - பகவத்கீதையில் சொன்னது போல - முக்குணங்களின் சேர்க்கையே", என குருதேவர் எங்களிடம் விளக்கினார். கீழ்மட்டத்தில் உள்ளது, தமோ குணம் (இருள்படுத்தும் குணம்). அதை விடச் சிறந்தது, ரஜோ குணம் (செயல்வசப்படுத்தும் குணம்). எல்லாவற்றிலும் சிறந்தது, சத்வ குணம் (தெளிவுபடுத்தும், உயர்த்தும் குணம்). இந்த பிரம்மாண்ட மண்டலத்தில் எல்லா இடத்திலும் இக்குணங்கள்  தனித்தோ, சேர்ந்த கலவையாகவோ உள்ளது. சில உலகங்களின் குழுமம் (Galaxy) முழுமையாகக்  கூட ஒரே குணமாக இருப்பதாக குருதேவர் கூறியுள்ளார். என் ஞாபகத்திற்கு வந்தவரை, அவர் இவ்விஷயத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களின் தொகுப்பு கீழ்வருமாறு:

"சில உலகக் கூட்டங்களில் தமோ குணம் மேலோங்கி உள்ளது. அவற்றில் வாழ்பவர்கள் பெரும் முரடர்களாக, ஆன்மீக வளர்ச்சி என்றால் என்ன என்றே அறியாமல் இருக்கிறார்கள். உக்ரமான விலங்குகள் , மனிதனை மனிதன் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் அங்கு நடமாடுகின்றன. எப்போதும் சண்டை, போராட்டம் அங்கு நிலவுகின்றன. உடற் காமம், அனைத்து வித புலனின்பங்கள் - இவை மட்டும் தான் வாழ்க்கை என்ற கொள்கையுடன்  திரிகிறார்கள்.

"இன்னும் சிலவற்றில் ரஜோ குணம் மேலோங்கி உள்ளது. அவற்றில் தன் தேவைகளைப் பற்றி அறியும் அறிவுடன் உள்ளார்கள். அவர்களின் கவனமெல்லாம் எப்படி தன்னை முன்னேற்றிக் கொள்வது, எப்படி பெரும்பான்மையான வளங்களைத் தன்வசம் கொள்வது, எப்படி மற்றவர்களை விட முந்துவது, போன்ற  சுயநலக் கொள்கையுடன் உள்ளார்கள். நம்முடைய 'மில்கி வே கேலக்ஸி' (Milky Way Galaxy) இந்த வகையைச் சார்ந்தது.

இங்கு நம் பூமி கோளத்தைப் பற்றி எனக்கு [சுவாமி கிரியானந்தா] இன்னொரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் பரமகுரு, சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி, ஒவ்வொரு கேலக்ஸி மையத்திலிருந்தும் ஆன்ம சக்தி தொடர்ந்து வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்த்தால், நம் பூகோளம் கேலக்ஸியின் வெளி விளிம்பில் உள்ளதால், நம் கோளத்தில் ரஜோ குணம் மையத்தின் அருகே உள்ள கோளங்களை விட இன்னும் தூக்கலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

குருதேவர் தொடர்ந்து, "இன்னும் சில உலகக் குழுமங்களுள் சத்வ குணம் மேலோங்கி இருக்கின்றது. அதில் உள்ள கோளங்கள் 'ஈடன் கார்டனைப்' (Garden of Eden) போல் ஒத்து இருக்கும். அங்குள்ளவர்கள் தேவலோகவாசிகளுடன் சுலபமாகத் தொடர்பு கொள்ள முடியும். எங்கு காண்கிலும் ஒரு நேர்த்தியான அழகு தென்படும்.

"ஒரு விஷயத்தை முக்யமாக மனத்தில் கொள்ளுதல் அவசியம்: எந்த குணம்   சிறந்து மேலோங்கி இருந்தாலும், அதில் வாழும் ஜீவன்கள் அஹங்கார போதத்தின் எல்லைக்கு உட்பட்டவர்களே! குறைவற்ற முழுமை (Perfection) என்பதை எல்லையற்ற ஆன்மாவில் மட்டுமே அனுபவிக்க முடியும். எப்படி நோக்கினாலும், அஹங்காரம் என்பது ஆன்மாவிற்கு ஒரு சிறைச்சாலை. அப்படி சிறைப்பட்டுள்ளதாகத் தோன்றும் ஆன்மா, எக்கால கட்டத்திலும் தொடர்ந்து சுதந்திரத்தையும், முழுமையான, வற்றாத ஆனந்தத்தையும் நாடிய வண்ணம் உள்ளது. அந்த எல்லையற்ற ஆன்மா, புலன்களால் அறியப்படும் பிரபஞ்சப் படைப்பில் மட்டும் அல்லாது, படைப்பிற்கு அப்பாற்பட்டும் உள்ளது. அத்துடன், ஆன்மா படைப்பின் தோற்றுவாயாக, அதற்கு சர்வாதாராமாய் உள்ளது.

"இப்படிப் பட்ட பிரம்மாண்ட பெருவெளியைப் பற்றி எண்ணிப் பார்த்தலே நம் மனத்தைப்  பரந்து விரிவாக்கும் தன்மை உடையது. 'என்னுள் உள்ள சத்தியமான ஆன்மா எல்லையற்றது, மரணமற்றது' என்ற தத்துவத்தை எப்போதும் மனத்தில் நிறுத்திக் கொள். என்னுடைய "சமாதி*" கவிதையை மனனம் செய்து, அது தினசரி தியானத்தின் போது நினைவு கூர்."

‪#‎Conversations‬ with Yogananda 039 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

---
* - "சமாதி*" அற்புதமான ஒரு ஆங்கிலக் கவிதை. குருதேவரின் "Autobiography of a Yogi" நூலில் இடம் பெற்றுள்ளது.

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

யோகானந்தரும், ஏசு கிறிஸ்துவும், மத மாற்றமும்!

ஓம்

யோகானந்தரும், ஏசு கிறிஸ்துவும், மத மாற்றமும்!

1. கல்கத்தாவில் பிறந்த ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் இந்துமத பிரதிநிதியாக 1920ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று அங்கேயே இருந்து அவருடைய கடைசி மூச்சு வரை (1952), நம் சனாதன தர்மம் (Eternal Religion) எனப்படும்  இந்து தர்மத்தைப் பரப்பியவர். சுவாமி சிவானந்தர், காஞ்சி பரமாச்சாரியார் போன்றோர் 'இவரை ஒரு உன்னத மகான் என்றும், இம்மாதிரி புருஷர்கள் உலகில் தோன்றுவது மிக அரிது என்றும், உலகில் மிகுந்த அவசியம் ஏற்படும் போது தான் இப்படிப்பட்ட உயர்ந்த மகான்கள் தோன்றுவர்' எனவும் கூறியுள்ளனர்.

2. நம் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கும் போது, அமெரிக்க தேச மக்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு), கர்மத் தளையிலிருந்து விடுபட ராஜ யோகம், வேதாந்தம், தியானம், ஜபம், மந்திரம், பஜனை, என்று கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு, நம் மத முக்கிய அம்சங்களை, மேலோட்டமாக அவர்களின் ரசனைக்கு ஏற்ப சிறிது மாற்றிப்,  புகுத்தியவர்.

3. இவர் Home Study Lessons மற்றும் பல்வேறு நூல்கள் மூலம் ஆன்ம, மன, உடல் வளம் ஒருங்கே கொடுக்கும், இந்து தர்மப் படி வாழும் கலைக் கல்வியை போதித்து, ஆயிரக்கணக்கான பேர்களை  உலகெங்கும் சென்றடைந்தார். அவர் ஆரம்பித்த SRF/YSS  நிறுவனங்கள், அவரின் சீடர்கள் (120 சீடர்கள் அவர் உடலை விட்டு பிரியும்போது இருந்தனர்) நிறுவிய Ananda போன்ற சமூகங்கள் மூலம் இடையறாமல் லட்சக்கணக்கானோர் இன்றும் பயன் பெற்று வருகின்றனர். குறிப்பாக, இவர்களில் பெரும்பான்மையோர் இந்துமதம் அல்லாதவர்கள். ஆனால், ஸ்ரீ யோகானந்தரின் போதனையின் மூலம், இவர்கள் இந்துமதத்தை நம்மை விட அதிகம் நேசிப்பவர்கள்!

4.  அவர் பரமகுருவின் குருவான "மகாவதார்" பாபாஜீயும்,  ஏசு கிறிஸ்துவும் கலந்து பேசி, அவர் அமெரிக்காவிற்கு சென்று கிரியா யோகத்தைப் பரப்பவும், சர்ச்சின் பிடியில் இருக்கும் உண்மையான கிறிஸ்தவ போதனைகளை புனருத்தாரணம் செய்யவும், தெய்வக் கட்டளையாக அனுப்பியுள்ளனர். அதற்கேற்ப அவர் பைபிளில் உள்ள ஏசு கிறிஸ்துவின் ஒவ்வொரு கருத்துக்கும் இந்து தர்ம கோட்பாடுகளுக்கும் (குறிப்பாக பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன போதனைக்கும்) முரண் ஒரு சிறுதும் கூட இல்லை என்று வாழ்நாள் முழுதும் போதித்து, எழுதியுள்ளார்.

5. அவர் எழுதிய 1000 பக்கங்களுக்கும் மேலான "The Second Coming of Christ" என்னும் படைப்பில் பல 'புரட்சிகரமான' (குறிப்பாக கிறிஸ்தவ சர்ச், மத மாற்றம் போன்றோர் வயிற்றில் புளி கரைக்கும் வண்ணம்) பல கருத்துக்களை, உண்மையை நாடும் கிறிஸ்தவர்கள் ஏற்கும் வண்ணம், விவரித்துள்ளார். அவற்றில் சில:
- ஏசு கிறிஸ்து (~14 - 27 வயது வரை) இந்தியாவில் பாடம் பயின்றது.
- நம் இந்து குருமார்கள் கிறிஸ்து பிறக்கும் சமயம் விஜயம் செய்தது.
- Holy Trinity (Holy Ghost, Son, Father) =  "ஓம் தத் ஸத்"; Amen = Aum/Om
- Christ Consciousness = Krishna Consciousness = Universal Consciousness (பரமாத்மா)
- மறுபிறப்புக் கொள்கையை கிறிஸ்துவின் வாசகங்களிலேயே எடுத்துச் சொன்னது. 
- ஏசு கிறிஸ்து ஒரு பெரும் யோகி மற்றும் ஒரு அவதார புருஷர். அவர் கூறிய கருத்துக்கள் எல்லாமே இந்து தர்மத்தில் உள்ளவையே.
- ஏசு கிறிஸ்து மட்டுமே "The Only Son of God" அல்ல. மற்ற அவதார புருஷர்களுக்கும் இடம் உள்ளது.
ஸ்ரீ யோகானந்தர் ஏசு கிறிஸ்துவை மிகவும் நேசித்தார். அவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரும், கிறிஸ்துவும் இரு கண்களைப் போல! ஆனால், சர்ச் செய்த திரிபுகளையும், அவர்களின் பணபலத்தால் தகாதமுறையில் செய்யும் மத மாற்றத்தை நன்கு சாடியுள்ளார். 'கிறிஸ்து ஒருமுறை தான் சிலுவையில் அறையப் பட்டார், ஆனால் அவரின் போதனைகள் தினசரி சர்ச் போதகர்களினால் சிலுவையில் அறையப் படுகிறது.' என்று ஹாஸ்யமாக விசனப் பட்டுள்ளார்.  இந்த புத்தக்கத்தைப் படித்தால், இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, பின்வரும் எந்த ஜென்மத்திலும் கிறிஸ்தவ மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் ஆகி விடும். அதில் ஏதாவது புதிதாக இருந்தால் தானே அந்த எண்ணம் வருவதற்கு!

6. மத மாற்றம் என்பது கடவுளைக் கூறு போடும் ஒரு சாத்தானின் கருவி! இந்து மதத்தின் கோட்பாடு மத இணக்கம், மத மாற்றம் அல்ல. ஸ்ரீ யோகானந்தரின் உன்னத செயல் என்னவென்றால் அவர் மத இணக்கத்தை நடைமுறையில், குறிப்பாக அவர்கள் 'பேட்டையிலேயே' புகுந்து, கொண்டு வந்தது.

1 மத இணக்கம் பெற்றவர் = 1000 மத மாற்றப்பட்டவர்கள்

ஏனென்றால், மேலே கூறியது போல ஒரு மத இணக்கம் பெற்றவரின் சொந்தபந்தங்கள், சந்ததிகள் அனைவரையும் அந்நபரின் செயல்பாடு, கருத்துக்கள் தாக்கம் செய்யும். மத மாற்றம் செயப்பட்டவர் தெளிந்து ஒருக்கால் மத இணக்கம் பெறலாம், ஆனால் மத இணக்கம் பெற்றவர் மத மாற்றம் அடையவே முடியாது.

7. நாம் மத இணக்கம் பெறுவது (இந்து சமயத்திற்கு இது புதிதல்ல - ஸ்ரீ ஆதி சங்கரர் 'ஷண்மதங்களான', [சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் - சூரியன், கௌமாரம், காணபத்தியம்] அறுவகைச் சமயத்தை இந்து மதத்தில் சீர்ப்படுத்தி ஒருங்கிணைத்தவர்) தான் மத மாற்றத்தைத் தடுக்கும் ஒரே பிரம்மாஸ்திரம்.  நாம் இந்து மதத்தில் இருந்து இழந்தவர்களைத் திரும்பப் பெறவும் இது ஒன்றே வழி!

ஒரு வேண்டுகோள்: புதுமையை நாடி விரும்பும் நம் இளைய சமுதாயத்திற்கு, வறுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு (மத மாற்றம் செய்வோரின் Target) மேலே கூறியது போல, மத இணக்கத்திற்கான அறிவை வளர்க்க வேண்டும். 'கிறிஸ்து' பேர் கேட்டாலே அரண்டு மிரளாமல், அதில் உள்ள கருத்துக்களை அறிந்து தம்மைத் தயார்படுத்திக் கொண்டால், மத மாற்றப் பேய்கள் நம்மைக் கண்டு மிரளும்! :-)

பிரேமம் லோகத்தில் என்றும் பரவ,
பரமஹம்ஸ தாஸன் (D.L. Sivakumar)

PS: அமெரிக்காவில், குறிப்பாக Scientific, Engineering, community யில் இப்போது இந்து மதத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கின்றது. நம் PM திரு. மோடி அவர்களின் சமீப விஜயத்தின் (Facebook meeting with Mark Zuckerberg) போது மார்க் குறிப்பிட்ட மறைந்த ஆப்பிள் நிறுவனர் (Steve Jobs) அவரின் கடைசி ஆசையாக ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய "Autobiography of a Yogi" என்ற நூலை அவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்குத் தருமாறு செய்வித்தார். அந்த ஒரு நூல் மட்டுமே அவரின் iPod ல் இருந்தது என்றும், அதை அவர் வருடாவருடம் தன் முன்னேற்றத்திற்கு படித்து வந்ததாகக் கூறியுள்ளார். ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் "Father of Yoga in the West" என்று சகல வல்லுனர்களாலும் போற்றப் படுகிறார். இத்தகைய மரியாதைக்குரியவரை நம்மவர்கள் தூற்றுவது சிறுபிள்ளைத் தனமே!

  

Thursday, September 24, 2015

038

ஓம் சத்குரவே சரணம்

1951 பிப்ரவரி மாதம் என நினைக்கிறேன் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பெருத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள், குருதேவர்,

"இது பரவாயில்லை, இன்னும் விசித்திரமாக பல உலகங்களில் உள்ளன. சிலவற்றில் எப்போதும் மழை நிற்காமல் பெய்து கொண்டிருக்கும்; வேறு சிலவற்றில் சூரியன் அஸ்தமனமே ஆகாமல் தொடர்ந்து சுட்டுப் பொசுக்கும்."

என்று கூறினார்.

‪#‎Conversations‬ with Yogananda 038 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

Tuesday, September 22, 2015

027


ஓம் சத்குரவே சரணம்


அமெரிக்காவில் உள்ள மதநிறுவன வழக்கங்களைப் பற்றி குருதேவர்,

"இங்குள்ள கிறிஸ்தவ மத சம்பிரதாயங்கள் சீர்படுத்தப் பட வேண்டும். இங்கு 'மினிஸ்டர்'களுக்கு புத்திபூர்வமாக ட்ரைனிங் கொடுக்கிறார்கள். அவர்கள் நன்கு சொற்பொழிவு ஆற்றுகிறார்கள், ஆனால் அவர்கள் தியானம் செய்வதிலோ, ஆன்ம ஞானம் பெறுவதிலோ முனைப்பு காட்டுவதில்லை.

"நம் ஸ்தாபன கோயில்களில்,  'மினிஸ்டர்'கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்ம ஞானம் பெற முக்கியத்துவம் தருகிறார்கள். நான் ஒருவரை 'மினிஸ்டர்' ஆக  நியமிக்கும் முன்னர், அவர் முன்ஜென்மத்தில் எவ்வளவு தூரம் ஆன்ம வளம் அடைந்துள்ளார் என்பதை அறிந்த பின் தான் அவரை நியமிப்பதுண்டு." கூறினார்.

மேலும் மிகுந்த தீவிரத்துடன்,

" இப்போது நம் ஸ்தாபன கோயில்களின் மூலம் ஒரு பெரும் மாற்றம் உருவாக உள்ளது. உண்மையான நாட்டம் உடையவர்கள் அங்கு செல்வார்கள். அக்கோயில்கள் ஒரு ஆன்மீக பரிசோதனைக் கூடம் போல இயங்கும். மக்கள் தான் கற்கும் போதனைகளை, அங்கு அவர்களின் வாழ்க்கை நடப்பில் ஒற்றிப் பார்த்து, எந்தக் கருத்து ஒத்துப் போகிறது, எந்தக் கருத்து ஒத்துப் போகவில்லை, எதனால் ஒத்துப் போகவில்லை? என்று ஆராய வழி வகுக்கிறோம். வழிவழியாக வழங்கி வரும் உணர்வு பூர்வமாக திணிக்கப் படும் மூட நம்பிக்கைகளை, அவர்கள் வாழ்க்கையில் ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை." என்ற ஒரு முக்கிய விஷயத்தை அவர் கூறினார்.  

‪#‎Conversations‬ with Yogananda 027 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar


ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

Monday, September 21, 2015

087


ஓம் சத்குரவே சரணம்

ஒருமுறை குருதேவர், "மிகச் சில மகான்களே முடிந்த முடிவான முக்தியை (final liberation) அடைந்துள்ளார்கள்"  என்னும் விஷயத்தைக் கூறினார்.

அவர் கூறிய விஷயம் எனக்குப் புதிராக இருந்தது. நான் உறுதி செய்து கொள்ள, "[உங்கள்] சுயசரிதத்தில் (Autobiography of a Yogi) குறிக்கப் பட்ட பல மகான்களின் நிலை என்ன? அவர்கள் இறந்து, சென்ற பிறகு, மீண்டும் மறுபிறவி எடுத்திருப்பார்களா?" எனக் கேட்டேன்.

[யோகியின் சுயசரிதத்தில், பரமஹம்ச யோகானந்தர் முடிவான முக்தி நிலையைப், பொதுவாக இந்த ஸ்தூல லோகத்திலிருந்து அல்லாமல், உயர்ந்த சூக்ஷும லோகங்களிளிருந்து அடைகிறார்கள் என்று குறித்துள்ளார். எனக்கு அப்போது இந்த முடிவான நிலையை எட்டுவது மிகவும் அரியது என்றே தோன்றிற்று.]

குருதேவர் அதற்கு, "அந்நூலில் குறிக்கப்பட்ட மகான்களிலும், மிகச் சிலரே  முடிந்த முடிவான முக்தியை அடைந்துள்ளார்கள்"  என்று பதிலளித்தார்.

நான் அந்நூலில் குறிக்கப் பட்ட சில மகான்களின் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லி அவர்கள் முடிவான நிலையை அடைந்துள்ளார்களா? என்று வினவினேன். ஒவ்வொரு முறையும், அவரது பதில், "இல்லை, இல்லை" என்றே வந்தது.

கடைசியாக அவரே தொடர்ந்து, "பாபாஜீ, லாஹிரி மகாசாயர், ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜீ, லாஹிரி மகாசாயரின் இரு சீடர்கள்: சுவாமி பிரணாபானந்தா மற்றும் ராம் கோபால் முசும்தார் மட்டுமே அந்த நிலையை அடைந்துள்ளார்கள்,"   என்று பதிலளித்தார்.

இந்த உரையாடலின் போது, தன்னுடைய பெயரை இப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால், பிற சமயங்களில், அவர் இந்தப் பிறவிக்கு முன்னரே முடிவான முக்தியை தான் அடைந்துவிட்டதாகக்  கூறியிருக்கின்றார்.

மேலும் அவர் கூறினார், "நான் முடிவான முக்தியடைந்த மற்றொருவரைச் சந்தித்து உள்ளேன். அவர் பெயர் யோகி ராமைய்யா. அவர் மாபெரும் ஞானியான ரமண மஹரிஷியின் சிஷ்யர். அவ்வப்போது, ஒரு சில சமயம், குருவைக் காட்டிலும் சிஷ்யர் ஆன்மீக ரீதியில் உயர்ந்த நிலை அடைவதுண்டு."

(நான் [ஸ்வாமி க்ரியானந்தா] 'யோகி ராமைய்யா 'அவர்களை  1960ஆம் ஆண்டு சந்தித்தேன். அவர் 'ஸ்ரீ ராம யோகி' என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டார். அவரைப் பற்றி மேலும் இந்நூலில் பின்னர்க் குறித்துள்ளேன்.)

"ஒரு ஞானி, 'கடவுளும் நானும் ஒன்று' என்ற ஐக்கியத்துவத்தை, உணர்ந்த கணமே ஏன் அவருடைய கர்மபலன்கள் மறைவதில்லை?" என்று வினவினேன்.

"அந்த நிலையில் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. அவை எல்லாமே ஒரு கனவு போலத் தோன்றும். அந்நிலையிலேயே ஒரு சில ஜன்மாக்கள் கூட எடுக்க நேரலாம். அப்படி இப்பூவுலகில் பிறப்பெடுத்து  அவர்களின் சிஷ்யர்கள் முக்தி பெற உதவுவார்கள்.  இப்படி மேனிலையை அடைந்த மஹான்கள், பிறரை மேம்படுத்தும் நோக்குடன், திரும்பப் பிறக்கத் துளியளவு பூலோக கர்மாவை வேண்டுமென்றே கூட தக்க வைத்திருப்பார்கள்." 

"உயர்வான 'நிர்விகல்ப ஸமாதி' நிலையை அடைந்தபின், புதிதாகக் கர்மாவைச் சேர்க்கும் அஹங்கார போதம் இருக்காது. அது முக்திக்கு ஈடான  ஒரு நிலையே."

"முடிவான முக்தியை அடைந்த பின்னரும் இப்பூவுலகில் திரும்ப அவர்கள் அவதரிக்க என்ன காரணம், குருதேவா?" என்று கேட்டேன்.

"பிறருக்கு உதவ வேண்டும் என்ற அவர்களின் 'பற்றற்ற ஆசை' (Desireless Desire) தான்!" என்று பதில் அளித்தார்.

அவருடைய Home Study Lessons (கரஸ்பாண்டென்ஸ்) பாட நூலில், கர்ம வினைகளில் இருந்து முற்றும் விடுபட்ட ஒரு ஞானியின் அவதரிப்பையும், சிறிது கர்மா நிலுவையில் உள்ள ஞானியின் மறுபிறப்பு பற்றியும், அவர்களுக்கிடையே உள்ள  வேறுபாடுகளையும் விவரித்து உள்ளார்.

முடிவான முக்தி அடையாதவர்கள் பிறந்து, பாக்கியுள்ள கர்மபலன் கழிந்த பின்னர், 'ஏற்றம் பெற்று' முழுமையான முக்தி பெற்றவர் ஆகிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்கள் இவ்வுலகில், குறிப்பாக அவர்களின் சிஷ்யர்களின் ஆன்ம வளர்ச்சிக்காகத் திரும்பப் பிறக்கிறார்கள். அவர்கள் "ஜீவன் முக்தர்கள்" என்று அழைக்கப் படுகிறார்கள். அவர்களின் ஆற்றலால் மேம்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும், கணிசமானதாக இருக்காது.

மாறாக,முழுமையான முக்தி அடைந்தவர்கள், பெரும்பாலான மானிட சமுதாயத்தின் மேல் தன் அருட்சக்தியைப் பொழிந்து அவர்களை மேம்படுத்த, கடவுளின் முழுவெளிப்பாடான ஒரு அவதாரப்  புருஷராக உலகில் தோன்றுகிறார்கள். அவர்கள் "பரமமுக்தர்கள்" - கர்மவினைகளை முந்தைய பிறப்பிலேயே  முற்றிலும் கழித்தவர்கள். அத்தகையோரிடம்  சரணடைவோர் யாராகிலும் அழிவிலிருந்து காக்கப்பெற்று மேம்படுவது உறுதி.

"நீங்கள் ஒரு கடவுள் அவதாரமா?" என ஒருமுறை குருதேவரைக் கேட்டேன். அதற்கு அவர் அமைதியாக, "இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த [உலகெங்கும் பயன்தரும்]  மார்க்கத்தைப் பரப்ப அவதார புருஷர் அல்லாத மற்றொருவரால் சாதிக்க இயலாது," எனக் கூறினார்.

குருதேவர் கைக் குழந்தையாக இருக்கும் போது. அவருடைய தாயார் பரமகுரு 'யோகாவதார்' லாஹிரி மகாசாயரைத் தரிசிக்க சென்றார். "இளம் தாயே, உன் குழந்தை ஒரு யோகி. அவன் ஒரு ஆன்மீக ரயில்வண்டி போல பல ஆன்மாக்களைக் கடவுளின் ராஜ்ஜியத்திற்கு ஏற்றிச் செல்வான்," என யோகாவதார் குருதேவரைப் பற்றி தாயாரிடம் தொலைநோக்கத்துடன் வாக்கருளினார். இப்படிப் பட்ட வார்த்தைகளின் வர்ணனை, அவதார புருஷர் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும்.

‪#‎Conversations‬ with Yogananda 087 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar


ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

Thursday, October 11, 2012

315

ஓம் சத்குரவே சரணம்
நான் குருதேவரிடம் ஒரு நாள், "ஐயா, யாரோ ஒருவர் நம் ஜீன் ஹாப்டிடம் (Gene Haupt) 'ஒருவனுக்கு அருள் கிட்டுவது, கிட்டாமல் போவது எல்லாம் கடவுளின் விளையாட்டு' என பகவான் ராம கிருஷ்ணர் உரைத்ததாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஜீன் மிகக் கலக்கமடைந்துள்ளார். ஜீன் இதற்கு அர்த்தம் செய்து கொண்டுள்ள விதம் பின்வருமாறு: ஒருவன் பல வருடங்களாக ஆன்மீகப் பயிற்சி செய்தும் எந்தவொரு பயனையும் அடையாமல் போகலாம், ஆனால் கடவுள் வேறு ஒரு காரணமுமின்றித் தன்னிஷ்டத்திற்கு ஒரு குடிகாரனுக்குக் கூட அருள் புரியலாம்.

குருதேவர் இந்த விளக்கத்தைக் கேட்டவுடன் முகம் சுளித்துக் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார், "ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவ்வாறு ஒரு போதும் கூறியிருக்க மாட்டார்! ஆகமங்களையும், அனுபூதி பெற்றவர்களின் உபதேசங்களையும் அரைகுறை ஞானம் உடையவர்கள் விளக்கம் செய்து கொள்ள முற்படும்போது இப்படித் தான் ஆகும். கடவுள் தன்னிசைக்குத் தாறுமாறாகச் செயல்படும் ஒரு ஜன்மமல்ல! சில சமயத்தில் அவர் செயல் விளையாட்டாகக் கூட மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஏனென்றால், மக்கள் பழைய கர்ம வினைகளின் விளைவுகளை அறியாத காரணத்தால். கடவுள் எப்போதுமே நியதிக்குட்பட்டுத் தான் செயல்படுவார். நியதியை ஆக்குவித்தவரே கடவுள் தான்: அப்படியிருக்க, ஏன் அவர் அதற்கெதிராகச் செயல்பட வேண்டும்? ஹாப்டிடம் அவன் இந்த விஷயத்தை மிகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளான் என்று நான் கூறியதாகச் சொல்."

"நான் அவனிடம் கூறுகிறேன்" என்று நான் பதில் சொன்னேன். சற்றுப் பொறுத்து, "ஐயா, தயவு செய்து நீங்களே ஏன் ஜீனிடம் பேசக் கூடாது? அவன் சில காலமாகவே கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறான்" என்று உரையாடலைத் தொடர்ந்தேன்.

அதற்குக் குருதேவர் ஒருவித விரக்தியுடன், "என்ன செய்வது, நம் சங்கத்தை சாத்தான் சோதனைக்கு உட்படுத்துகிறான்; ஜீன் அதற்கு ஒரு விலக்கல்ல," எனப் பதிலளித்தார்.

"ஓ, அது தானா விஷயம்? ஏதோ ஒன்று நம் சங்கத்தினரைக் கஷ்டத்தில் தள்ளுவது போல் தெரிகிறது," என்று நான் சொன்னேன்.

குருதேவர் வருத்ததுடன், "ஆமாம், இன்னும் பல தலைகள் உருளும்," எனப் பகர்ந்தார்.

"ஐயா, இது நீண்ட காலம் தொடருமா?" என்று கேட்டேன்.

"ஆமாம்," என்று கூறி, குருதேவர், மேலும் தொடர்ந்து, "இது அந்தப் பையன், ஜேன் (Jan), என்சினிடாஸ் ஆச்ரமத்தில் இருந்து விலகிய போது ஆரம்பித்தது. அப்புறம் ஸ்மித் (Smith) வெளியேறினான். இன்னும் பல பேர் செல்வார்கள்," என்று முடித்தார்.

‪#‎Conversations‬ with Yogananda 315 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.