ஓம் சத்குரவே சரணம்
"எல்லா பிரபஞ்சமும் - பகவத்கீதையில் சொன்னது போல - முக்குணங்களின் சேர்க்கையே", என குருதேவர் எங்களிடம் விளக்கினார். கீழ்மட்டத்தில் உள்ளது, தமோ குணம் (இருள்படுத்தும் குணம்). அதை விடச் சிறந்தது, ரஜோ குணம் (செயல்வசப்படுத்தும் குணம்). எல்லாவற்றிலும் சிறந்தது, சத்வ குணம் (தெளிவுபடுத்தும், உயர்த்தும் குணம்). இந்த பிரம்மாண்ட மண்டலத்தில் எல்லா இடத்திலும் இக்குணங்கள் தனித்தோ, சேர்ந்த கலவையாகவோ உள்ளது. சில உலகங்களின் குழுமம் (Galaxy) முழுமையாகக் கூட ஒரே குணமாக இருப்பதாக குருதேவர் கூறியுள்ளார். என் ஞாபகத்திற்கு வந்தவரை, அவர் இவ்விஷயத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களின் தொகுப்பு கீழ்வருமாறு:
"சில உலகக் கூட்டங்களில் தமோ குணம் மேலோங்கி உள்ளது. அவற்றில் வாழ்பவர்கள் பெரும் முரடர்களாக, ஆன்மீக வளர்ச்சி என்றால் என்ன என்றே அறியாமல் இருக்கிறார்கள். உக்ரமான விலங்குகள் , மனிதனை மனிதன் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் அங்கு நடமாடுகின்றன. எப்போதும் சண்டை, போராட்டம் அங்கு நிலவுகின்றன. உடற் காமம், அனைத்து வித புலனின்பங்கள் - இவை மட்டும் தான் வாழ்க்கை என்ற கொள்கையுடன் திரிகிறார்கள்.
"இன்னும் சிலவற்றில் ரஜோ குணம் மேலோங்கி உள்ளது. அவற்றில் தன் தேவைகளைப் பற்றி அறியும் அறிவுடன் உள்ளார்கள். அவர்களின் கவனமெல்லாம் எப்படி தன்னை முன்னேற்றிக் கொள்வது, எப்படி பெரும்பான்மையான வளங்களைத் தன்வசம் கொள்வது, எப்படி மற்றவர்களை விட முந்துவது, போன்ற சுயநலக் கொள்கையுடன் உள்ளார்கள். நம்முடைய 'மில்கி வே கேலக்ஸி' (Milky Way Galaxy) இந்த வகையைச் சார்ந்தது.
இங்கு நம் பூமி கோளத்தைப் பற்றி எனக்கு [சுவாமி கிரியானந்தா] இன்னொரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் பரமகுரு, சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி, ஒவ்வொரு கேலக்ஸி மையத்திலிருந்தும் ஆன்ம சக்தி தொடர்ந்து வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்த்தால், நம் பூகோளம் கேலக்ஸியின் வெளி விளிம்பில் உள்ளதால், நம் கோளத்தில் ரஜோ குணம் மையத்தின் அருகே உள்ள கோளங்களை விட இன்னும் தூக்கலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
குருதேவர் தொடர்ந்து, "இன்னும் சில உலகக் குழுமங்களுள் சத்வ குணம் மேலோங்கி இருக்கின்றது. அதில் உள்ள கோளங்கள் 'ஈடன் கார்டனைப்' (Garden of Eden) போல் ஒத்து இருக்கும். அங்குள்ளவர்கள் தேவலோகவாசிகளுடன் சுலபமாகத் தொடர்பு கொள்ள முடியும். எங்கு காண்கிலும் ஒரு நேர்த்தியான அழகு தென்படும்.
"ஒரு விஷயத்தை முக்யமாக மனத்தில் கொள்ளுதல் அவசியம்: எந்த குணம் சிறந்து மேலோங்கி இருந்தாலும், அதில் வாழும் ஜீவன்கள் அஹங்கார போதத்தின் எல்லைக்கு உட்பட்டவர்களே! குறைவற்ற முழுமை (Perfection) என்பதை எல்லையற்ற ஆன்மாவில் மட்டுமே அனுபவிக்க முடியும். எப்படி நோக்கினாலும், அஹங்காரம் என்பது ஆன்மாவிற்கு ஒரு சிறைச்சாலை. அப்படி சிறைப்பட்டுள்ளதாகத் தோன்றும் ஆன்மா, எக்கால கட்டத்திலும் தொடர்ந்து சுதந்திரத்தையும், முழுமையான, வற்றாத ஆனந்தத்தையும் நாடிய வண்ணம் உள்ளது. அந்த எல்லையற்ற ஆன்மா, புலன்களால் அறியப்படும் பிரபஞ்சப் படைப்பில் மட்டும் அல்லாது, படைப்பிற்கு அப்பாற்பட்டும் உள்ளது. அத்துடன், ஆன்மா படைப்பின் தோற்றுவாயாக, அதற்கு சர்வாதாராமாய் உள்ளது.
"இப்படிப் பட்ட பிரம்மாண்ட பெருவெளியைப் பற்றி எண்ணிப் பார்த்தலே நம் மனத்தைப் பரந்து விரிவாக்கும் தன்மை உடையது. 'என்னுள் உள்ள சத்தியமான ஆன்மா எல்லையற்றது, மரணமற்றது' என்ற தத்துவத்தை எப்போதும் மனத்தில் நிறுத்திக் கொள். என்னுடைய "சமாதி*" கவிதையை மனனம் செய்து, அது தினசரி தியானத்தின் போது நினைவு கூர்."
#Conversations with Yogananda 039 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
---
* - "சமாதி*" அற்புதமான ஒரு ஆங்கிலக் கவிதை. குருதேவரின் "Autobiography of a Yogi" நூலில் இடம் பெற்றுள்ளது.
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment