ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்
புதிதாக பார்க்க வந்த ஒருவர் குருதேவரிடம் கேட்டார், "பலவித யோக மார்க்கங்களில் எந்த மார்க்கத்தை நீங்கள் கற்றுத் தருகிறீர்கள்?"
குருதேவர் பதிலளித்தார், "எல்லாமே அடிப்படையில் ஒன்று தான். அவை சாதகர்களைப் பலவித வழிகளில் எடுத்துச் சென்றாலும் அவற்றின் இலக்கு ஒன்று தான்: ஆத்ம உணர்வை அடைதல் (Self-realization)."
"கிட்டத்தட்ட எல்லா யோக மார்க்கங்களும் விதவிதமான மனிதப் பண்புகளைப் பொறுத்து அமைந்துள்ளன. அவை பொதுவாக பக்தி, ஞானம், கர்மம் என்ற மூன்றுவித தொகுப்பில் அடங்கும்.
"இங்கு நாங்கள் கற்றுத்தருவது ராஜ யோகம் எனப்படும். இது எல்லாவித மார்க்கங்களுக்கும் நடுநாயகமாகத் திகழ்வதனால், 'ராஜ' யோகம் என்றழைக்கப்படுகிறது. மற்றவைகளைப் போலவே இது ஒரே இலக்கைக் கொண்டதானாலும், இம்மார்க்கம் மற்ற சுற்று வழிகளில் செல்லாமல் நேர்வழியில் இலக்கை அடைகிறது.
"உண்மையாக ஒவ்வொரு யோக மார்க்கத்திற்கும் இலக்கு உள்ளமைதியுடன் கூடிய சங்கமம் (the inner silence of communion) தான். நாங்கள் இதைக் கற்றுத் தருவதோடு நின்று மற்ற வழிமுறைகளை ஒதுக்கி விடுவதில்லை. விதவிதமான மனித தகவமைவுக்கேற்ப, நாங்கள் மற்றவைகளிலிருந்து தேவையானதை எடுத்து, கற்பவர்களின் கிரகிக்கும் சக்தியை உயர்ந்த இலக்கான உள்ளமைதிச் சங்கமத்தை நோக்கிச் செலுத்தக் கற்றுத் தருகிறோம்.
"பக்தி யோகத்தின் இலக்கு கடவுளை நோக்கி இடையறாது பாடிக் கொண்டே இருப்பதல்ல. ஒவ்வொரு சிறந்த பக்தனும் கடைசியில், அமைதியாகக் கடவுளுடன் சங்கமத்தைத் தான் அடைந்துள்ளனர். அங்கு அவர்களது பக்தி காதலாகிக் கசிந்துருகிக் கடவுளை நோக்கி உள்முகமாகத் தான் செல்கிறது. எல்லா பெரிய கர்ம யோகிகளும் கடைசியில், தங்கள் எல்லா சக்தியையும் அமைதியாக உள்முகமாகக் கடவுளை நோக்கிச் செலுத்துவதே மகத்தான சேவை என்று உணர்ந்துள்ளார்கள். எல்லா நிறைஞானிகளும் முடிவில், ஒருவன் ஞானத்தை அடைவது எண்ணுவதினால் அல்ல - ஞானம் உள்ளமைதியில் தான் பெறப்படுகிறது என்ற உண்மையை உணர்ந்துள்ளார்கள்.
"இவ்வண்ணம், எல்லா யோக மார்க்கங்களும் கிளைநதிகளைப் போலச் சேர்ந்து ஒன்றுகூடி ராஜ யோக நதியில் சங்கமிக்கின்றன."
#Conversations with Yogananda 354 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment