ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்
ஒருவர் இந்தியாவில் நடைமுறையில் உள்ள "உருவச்சிலை வழிபாட்டைத்" தாழ்த்தி ஒரு கருத்தைக் கூறியிருந்தார். குருதேவர் புன்னகைத்து,
"மேற்கத்தியர்கள் இந்துக்களை உருவச்சிலை வழிபாட்டாளர்களாக நினைக்கிறார்கள், ஆனால் அவர்களோ எதைக் கும்பிடுகிறார்கள்? பணம் மற்றும் பதவி - இவை மட்டும் உருவங்கள் இல்லையா?
"உயர்ந்த தத்துவங்களை நினைவுபடுத்த உருவத்தை உபயோகிப்பதில் தவறோ, ஆன்மீக உண்மைக்கு மாறாகவோ ஒன்றும் இல்லை. எத்தனை பேருக்கு அன்பு, அறிவு போன்ற நுண்மையான தத்துவங்களைக் கிரகிக்கும் சக்தி இருக்கின்றது?
"இந்து உருவங்கள் வெறும் கற்சிலைகள் அல்ல. அவை கடவுளின் பலவகை குணங்களின் அடையாளங்கள்! விதவிதமான அந்த குணங்கள் கடவுள் எண்ணிலடங்காதவர் என்ற உண்மையை உணர்த்துகிறது.
"மேற்கத்தியர்கள் இந்துக்களை நாஸ்திகர்கள் (heathens) என்றழைக்கிறார்கள், இந்துக்கள் மேற்கத்தியர்களை நாஸ்திகர்கள் என்கிறார்கள். நான் சொல்கிறேன், அறியாமை இருபக்கத்திலும் 50% - 50%. ஆனால், அறிவாளிகள் வெவ்வேறு திசையினில் இருந்து வந்தாலும், சந்தித்துக் கொள்ளும் போது சமரசமும், கருத்து ஒற்றுமையும் தான் விளங்குகின்றது.
"நான் ஜெர்மனியிலுள்ள கானர்ஸ்ரெத் என்ற ஊரில் 'தெரசா நியூமனைப்' பார்க்கச் சென்றேன். அவருடைய பிஷப் அவர் மற்ற யாரையும் பார்க்கத் தடை விதித்திருந்தார்! அப்படியும், அவர், 'நான் இந்தியாவிலிருந்து வந்துள்ள கடவுளடியாரைக் (the man of God) காண விழைகிறேன்' என்று கீழே காத்திருந்த எங்களிடம் கூற ஒருவரைச் சொல்லியனுப்பினார். தெரசா ஒரு உண்மையான துறவி." குருதேவர் தெரசாவின் முன்ஜன்ம விஷயத்தைக் கூறுகையில் அவர் மேரி மக்டலீன் (Mary Magdalene) ஆக இருந்ததாகக் கூறினார்.
நான் ஒருமுறை கேட்டேன், " அவர் முக்தியை ஏற்கனவே அடைந்து விட்டாரா?" என்று. "இன்னும் இல்லை," குருதேவர் பதிலளித்தார், "ஆனால் தெரசா நிர்விகல்ப சமாதியிலே (உயர்ந்த சமாதி நிலை) இருக்கின்றார். அவர் போன்றவரை இந்தியாவில் ஜீவன்முக்தன் என்றழைப்பார்கள்."
#Conversations with Yogananda 445 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment