Saturday, January 23, 2010

149

ஓம் சத்குரவே சரணம்

அவர் [பரமஹம்ஸ யோகானந்தர்] துறவிகளுக்கிடையில் செய்த கடைசி உபதேசம்:

" கடவுள் நாட்டத்தை வேறு யாராலும் உங்களுக்குக் கொடுக்க முடியாது. நீங்களாகவே தான் நாட்டத்தை சுயமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். கடவுளும் அதை உங்களுக்குத் தன்னிச்சையாகக் கொடுக்கவில்லை; ஏனெனில் அவர் மனிதர்களை தோற்றுவிக்கும் போது அவர்களை மரப்பாவைகளாக (puppets) படைக்கவில்லை. நீங்களே சுயமாக அவரை நாட வேண்டும் என்பதினால் தான்.


"புத்திக் கூர்மையை அதிகமாக விருத்தி செய்வதில் எச்சரிக்கையாக இருங்கள். நிறைய பேர் தங்களது பகுத்தறியும் சக்தியை பெருக்கி, அவர்களது மோகத்தின் வசப்பட்ட கருத்துக்களையே சரி என்று நிலைநாட்டச் சாதுர்யமாக செலவழிப்பார்கள். அதற்குப் பதிலாக இருதய குணத்தை விருத்தி செய்வதில் கவனத்தைச் செலுத்துங்கள். தினசரி எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரத்தைத் தியானத்தில், கடவுளை நேரடியாக அனுபவிப்பதில், உபயோகப்படுத்துங்கள்.


"நிறைய தூங்காதீர்கள். தூக்கம் கடவுளுடன் நம்மை சுயநினைவின்றித் தொடர்பு கொள்ளக் செய்கிறது. தூக்கம் என்பது  போலியான ஒரு ஆனந்தம் (counterfeit ecstasy).



"நிறைய தமாஷ் செய்யாதீர்கள். உங்களுக்கே தெரியும், நான் நல்ல ஒரு நகைச்சுவை விரும்பி என்று. ஆனால், நான் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட முடிவெடுத்தால், என்னை யாராலும் சிறிதளவு கூட நகைக்க வைக்க முடியாது. சந்தோஷமாகவும் உவகையுடனும் இருங்கள், ஆனால் உள்முகமாக. வெளியிலே கம்பீரத்துடனும் (grave), உள்ளே உவகையுடனும் இருங்கள்.


"தியானத்தில் சேகரித்த கடவுள் அனுபவத்தை வீண்பேச்சுக்களால் விரயம் செய்யாதீர்கள். பயனற்ற சொற்கள் அமைதி என்ற பால் நிரம்பிய பாத்திரத்தைத் துளைக்கும் ரவைக்குண்டுகள். அனாவசியமான பேச்சுக்களும், எகத்தாள சிரிப்புகளும் மனத்தை வெற்றிடமாக்கி விடும் என நீங்கள் விரைவில் உணர்வீர்கள். உங்கள் சித்தம் என்ற பாத்திரத்தில் தியான அமைதி என்ற பாலை நிரப்பி வைத்திருங்கள். அதிக சிரிப்பு மனத்தைத் துளை போட்டு, அமைதியை வெளியே விட்டு விரயப்படுத்தி விடும்.


"கள், உடலுறவு, பணம்: இம்மூன்றும் அதிமோக வலைகள். அவைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் பலஹீனமானவர்கள்; எனக்குத் தெரியும், ஆனால் தைர்யமிழக்காதீர்கள். முறையாக தொடர்ந்து தியானம் செய்யுங்கள். நீங்களே உள்ளே தோன்றும் ஆனந்தம் உண்மை என்று கண்டு கொள்வீர்கள். பிறகு புலனின்பத்தோடு அதை சீர்தூக்கிப் (compare) பார்ப்பதற்குத் தோதாக இருக்கும். அப்படி சீர்தூக்கி நிறுத்திப் பார்த்தால், துன்பம் கொடுக்கும் உங்கள் தீய குணங்களை நீங்களே உடனடியாக உதறித் தள்ள உதவும். ஆசையை வென்றிடச் சிறந்த வழி, அதை விட சிறப்பாகவுள்ள நிறைவு படுத்தும் ஒன்றோடு வைத்து சீர்தூக்கிப் பார்ப்பதே.


"உடலுறவு தற்சமயம் உங்களுக்குச் சுகமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உள்சங்கமத்தின் (inner communion) இன்பத்தைக் கண்டுகொண்ட பின், இது எவ்வளவு அதிக ஆனந்தத்தைக் கொடுக்கிறது என்பதை உணர்வீர்கள். இந்தச் சங்கமத்தைக் 'கேச்சரி முத்ரா' (நுனி நாக்கினால் மூக்கின் துவாரத்திலுள்ள நரம்புகளைத் தொடுவது அல்லது தொண்டையில் தொங்கும் மணியைத் தொடுவது) என்ற யோக முறையினால் ஸ்தூல சரீரத்திலும் அடைய முடியும். 


"நிறைய படிப்பது போன்ற மனச் சிதறல்களில் நேரத்தை விரயமாக்க வேண்டாம். போதனைகள், ஊக்கம் கொடுக்கும் மனவள நூல்கள் போன்றவை படிப்பதற்கு உகந்தது. ஆனால் அதுவும் தியானத்திற்கு இடையூறாக அமைந்தால் தீயதாகி விடும். ஊக்கம் கிடைப்பதற்காக ஒரு சிறிது படியுங்கள். அதிக நேரத்தை தியான அமைதியிலேயே செலவு செய்யுங்கள்.


"யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு நூறு புத்தகங்கள் மேல் பதிக்கப் பெறுகின்றன. நீங்கள் விரும்பினாலும் எல்லாவற்றையும் படிப்பது சாத்தியமல்ல! யாரும், எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், கிடைக்கப்பெறும் விஷய அறிவில், ஒரு துளி அறிவைத் தான் பெற முடியும். விஞ்ஞானிகள் தங்கள் விஷய அறிவைக் குறித்து பெருமிதம் அடைவார்கள், ஆனால் அவர்களால் ஒரு சாதாரண இலை எப்படித் தோன்றுகிறது என்பதை விளக்க முடியுமா? ஏன் மற்றவர்கள் கண்டுபிடிப்புகளை உங்கள் தலையில் போட்டுத் திணித்துக் கொள்கிறீர்கள்? எப்போதும் படிப்பதனால், படித்த விஷயங்களை தலையில் பளுவாக 'சுமப்பதைத்' தவிர வேறென்ன சாதிக்க முடியும்? அடிக்கடி நான் சொல்வதுண்டு, 'ஒரு மணி நேரம் படித்தால், இரண்டு மணி நேரம் எழுது, மூன்று மணி நேரம் யோசனை செய், மற்ற எல்லா நேரத்திலும் தியானம் செய்!' என்று.


"எவ்வளவு தான் எனக்கு ஸத்ஸங்க நிறுவன வேலைகள் தொடர்ந்து இருந்தாலும், நான் தினசரி கடவுளுடன் ஒன்றுவதை விட்டதேயில்லை. கிரியா யோகத்தையும், தியானத்தையும் நான் விசுவாசத்துடன் தொடர்ந்து செய்து வருகிறேன்.


"இங்கு ஆசிரமத்தில் வாழ வரும் சிலர், திருப்தி காணாமல் மனமுறிவுடன் திரும்பவும் உலக வாழ்க்கைக்கு செல்கிறார்கள். சில நாள் துறவு வாழ்க்கைக்குப் பின்னர், அவர்கள் மேற்கொண்டு ஆன்மீக முயற்சியையே 'துறந்து' விடுகிறார்கள். உங்களின் நல்லொழுக்கத்தினால் விளைந்த இந் நல்தருணத்தை நீங்கள் நழுவ விட்டு விடாதீர்கள். நீங்கள் தியானத்திற்குக் கொஞ்ச நேரம் தினசரி ஒதுக்கினால், ஆன்மீக வழியும் சுலபம் தான். காலையிலும், மாலையிலும் முனைப்பாகத் தியானம் செய்யுங்கள்.


"தியானமே செய்யாமல் விடுவதை விட ஒரு பதினைந்து நிமிடம் தியானம் செய்தால் கூட நல்லது. ஒரு அரை மணி நேரம் செய்தால் அதை விட நல்லது. அதை விட சாலச் சிறந்தது ஒரு மணி நேரம் செய்வது. 108 கிரியாக்களைச் செய்யுங்கள்; பிரணவத்தை முதுகுத்தண்டிலுள்ள சக்கரங்களில் நிறுத்தி ஜபம் செய்யுங்கள்; செய்து அவைகளினின்று தோன்றும் ஒலியை உள்முகமாகக் கேளுங்கள். உங்கள் விருப்பம் போல், 'ஹம்-ஸ' பயிற்சியையும் தொடரலாம். அல்லது பக்தி யோகம் [கடவுளிடம் தன்னை அர்ப்பணம் செய்வது] செய்யுங்கள்.


"'ஹம்-ஸ' பயிற்சியுடன், உங்கள் விருப்பப்படி, மூச்சுக் காற்றை முதுகுத்தண்டில் நிறுத்தி கவனிப்பதைச் செய்யுங்கள். மூக்குத் துவாரத்தில் மூச்சைக் கவனிப்பதை விட முதுகுத்தண்டில் மேலும் கீழுமாகச் செல்லும் அதன் போக்கைக் கவனிக்கவும். உங்கள் உடலிடம், 'நீ முறையாகத் தொடர்ந்து தியானம் செய்யவில்லையெனில், உனக்கு நான் சவுக்கடி தருவேன்' என்று கட்டளையிடவும். முடிந்தால், ஒன்றரை மணி நேரம் வரையும் ஒரே சமயத்தில் தியானம் செய்யுங்கள். 

நீங்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் [ஒரு அற்ப புல் பிடுங்கும் செயலாக இருந்தாலும், எப்படி பிரதர் லாரன்ஸ் அவைகளைக் கடவுளுக்கு மனத்தால் சமர்ப்பணம் செய்வாரோ அப்படி] கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். நீங்கள் அப்படி செய்தீர்களேயானால் கடவுள் இரங்கி வந்து உங்களுக்கு அருள் புரிவார்.


"மற்றொரு முக்கிய விஷயம் ஒன்றை உங்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்: என்னிடம் நீங்கள் காட்டிய மரியாதையை உங்களுக்கிடையேயும் வைத்திருங்கள். என்னிடம் எப்படி அன்புடன் பழகுகிறீர்களோ, அதே போல் உங்களுக்கிடையேயும் பழகுங்கள். 

உங்களுக்கிடையே பரஸ்பரம் தீயவற்றையே கண்டு கொண்டிருந்தால் உங்கள் இருவருக்குள்ளே இருக்கும் கடவுளின் பிரதி பிம்பத்தை அவமரியாதை செய்வதாக ஆகும். கடவுள் எல்லாருள்ளும் இருக்கின்றார். எல்லாவற்றிலும் நல்லதைப் பார்ப்பது கடவுளை எல்லாவிடத்திலும் காண்பதற்குச் சமம்."

#‎Conversations‬ with Yogananda 149 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)


---
* - இந்த வெகுஜன புத்தகத்தில் கடினமான இந்த முத்ரையைப் பற்றி மேலோட்டமாக அல்லாமல் விரிவாகக் கூற இயலாது. 

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment