ஓம் சத்குரவே சரணம்
"பெறுமவற்றுள் எல்லாவற்றுள்ளும் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுக," ("With all thy getting, get understanding") என்று பைபிள் கூறுகிறது (Proverbs 4:7). "புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுக" என்பதன் அர்த்தம் என்னவென்று மக்கள் கேட்கலாம்.
இங்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் என்பது மெய்ஞ்ஞானத்தைக் குறிக்கிறது. மெய்ஞ்ஞானம் என்பது புத்தகங்களைப் படிப்பதனால் வருவதில்லை, அது ஆத்ம விவேகத்தினால் தோன்றுகிறது என்று குருதேவர் விளக்கினார்.
அவர் சொன்னார், "விவேகம் மிக அவசியம், அது தர்க்க ரீதியான பகுத்தறிவினால் மட்டும் வருவதில்லை. ஆனால் அது ஆத்ம உணர்வின் (soul-intuition) மூலமாகத் தோன்றுவது.
பகுத்தறிவு ஒருவனுக்கு விஷயங்களைப் பற்றி அவை எப்படிப் பட்டவை (how of things) - அதாவது, அவை எப்படி செயல்படுகின்றன, அவை எப்படி நிகழ்கின்றன - என்று அறிந்து கொள்ள உதவும். ஆனால், அது விஷயங்களுக்கு இடையேயுள்ள நுண்ணிய உறவுகளை (interrelationships) வெளிச்சமிட்டுக் காண்பிக்காது. அது மட்டுமல்ல, இன்னும் ஆழமாக, விஷயங்களுக்கு அடிப்படை யாது, அவைகளால் என்ன பயன் போன்ற ஏன் என்ற கேள்விகளுக்கு (why of things) பகுத்தறிவு விடை கூறாது.
விவேகம் என்பது ஒருவனுடைய சுய முயற்சி. அது நான், ஒரு அலை, பிரம்மக்கடலில் ஆடுகிறேன் என்றுணரும் அறிவு. மெய்ஞ்ஞானம் என்பது முழுமையான பரம்பொருளைப் பற்றிய தன் அறிவை ஆழமாக்கிக் கொள்வதினால் விளைவது. புரிந்து கொண்ட ஒரு விஷயம் எல்லா தேச காலத்திலும் மாறாமல் பயன்பட்டால் அது மெய்ஞ்ஞானம்."
#Conversations with Yogananda 366 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment