Monday, September 17, 2012

101

ஓம் சத்குரவே சரணம்
குருதேவரது சத்தியத்தை நாடும் நெறி உலகநடைக்கு (pragmatic) ஏற்ப இருந்தது. அவர் அமெரிக்காவிற்கு வந்த புதிதில், பிரபலமான சிலர் தாங்கள் சாகாவரம் பெற்றுள்ளதாய் 'விளம்பரப்' படுத்தியிருந்தனர்.

அதைப் பற்றி ஒருவர் குருதேவரிடம் அவர் கருத்தைக் கேட்டார். அதற்கு குருதேவர்,

"வயதினால் தோன்றும் அறிகுறிகளான முடி உதிர்தல், நரைத்தல், பல் விழுதல் (செயற்கைப் பல்வரிசைத் தோற்றம்!), முகத்தில் சுருக்கம் போன்றவைகள் சாகாவரம் பெற்றுள்ளோம் என்பவர்களிடம் காணப்படுகிறதா என்று கவனமாக ஆராயுங்கள். 

 இம்மாதிரி மடியத்தகு வாழ்க்கையின் சாதாரண அறிகுறிகளே காணப்பட்டால், 'நாங்கள் எப்போதும் வாழ்வோம்' என்று வாய்பேசும் அவர்கள் கூற்றை எப்படி நம்புவது? அப்படிப்பட்ட கூற்றுக்களை ஒதுக்கித் தள்ளுங்கள்! 

தங்கள் வார்த்தைகளை நம்பியவர்கள் விழித்துக் கொண்டு உண்மை காண நேர்வதற்குள், நாம் இல்லோகத்தை விட்டு மேலோகம் சென்றுவிடுவோம் என்ற நப்பாசையினால் இப்படிப் பொய் புனைகிறார்கள். இடைப் பட்ட நேரத்தில், அவர்கள் பொய் வேஷத்தின் மினுக்கும் ஜாலத்தில் கிடைக்கும் அற்ப சுகத்தில் திளைக்கிறார்கள்.

பஞ்சபூத உடலை முடிவில்லாமல் உயிரூட்டி வைத்துக் கொள்வதனால் தான் என்ன பயனிருக்கிறது? அதை ஒருவித கோளாறுமின்றி, ஒளிரும் தேகமாக போஷித்தாலும், இவ்வுடல், அதனை உருவாக்கிய அகங்காரம் (ego) உட்பட, ஒரு சிறைச்சாலை தான்! 

நீ உடல் அல்ல; நீ அகங்காரமும் அல்ல; நீ என்றும் அழியாத ஆன்மா!

அழிவற்ற தன்மை என்பது அதீத உணர்வு (super consciousness) நிலையில் மட்டுமே சாத்தியம்" என்று தம் கருத்தைக் கூறினார்.

‪#‎Conversations‬ with Yogananda 101 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment