Tuesday, September 18, 2012

164

ஓம் சத்குரவே சரணம்
"நிறைய மக்கள் சாகும் தருவாயில் உலக வாழ்க்கையில் முழுமையாக ஆர்வம் இழந்து விடுகிறார்கள். அது இயற்கை மட்டுமல்ல, நியாயமானதும் கூட. ஏனென்றால், அவர்கள் மிக விரைவில் இவ்வுலகத்தை விட்டுப் போகத் தானே போகிறார்கள்! 

அது மட்டுமல்ல, இந்த உலகம் உண்மையில் நம்முடையதல்ல; இது கடவுளுடையது. இறக்கும் தருணத்தில் தோன்றும் இந்த விரக்தி, நாம் வாழ்க்கை முழுவதும் மும்முரமாக ஈடுபடும் பலவித செயல்களுக்கடியுலும் இந்த மனப் பற்றற்ற உணர்வினை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது.
"இறக்கும் தருவாயில், இதற்கு நேரெதிராக இருந்த ஒரு நபரின் கதை ஞாபகத்திற்கு வருகிறது. அத்தருணத்தில், அவர் தன் அறையில் இருந்த அகல் விளக்கு பெரிதாக எரிவதைப் பார்த்தார். 

அவர் தன் மகனை அழைத்து, 'ஏ ராமு, அவ்விளக்கின் சுடரைச் சிறிதாக்கு; அது எண்ணெயை வீணாக்குகிறது!' என்று உத்தரவிட்டார். 

அங்கு, அந்த மனிதனின் உயிர் உடலை விட்டு எந்த நேரத்திலும் நீங்கிப் போகக் கூடிய சமயம்; அதாவது, அவருடைய சொந்த உடல் 'விளக்கில்' உள்ள 'எண்ணெயே' கிட்டத் தட்ட தீர்ந்து போய் விட்டது. ஆனால் அவர் வெளியிலுள்ள அகல் விளக்கில் எண்ணெய் வீணாகிறதே என்று கவலைப் படுகிறார்! 

உலகப் பற்று அப்படிப் பட்டது. கடைசி வரை, மக்கள் எதை வாழ்க்கை என்று எண்ணுகிறார்களோ, அதையே இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறார்கள்.

"நீங்கள் அந்த மாதிரி இருக்க வேண்டாம்," என்று குருதேவர் ஒரு மந்த ஹாசத்துடன் முடித்தார்.

நாம் உலகத்தின் மேல் பற்று வைக்காமால், கடவுள் ஒருவரிடம் மட்டும் பற்று வைத்துக் கொண்டால், நம் எல்லோருக்கும் இடையறாத இன்பம் கைகூடும் என்பதற்கு குருதேவரின் அப்புன்னகையே ஒரு சான்று.

‪#‎Conversations‬ with Yogananda 164 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment