Wednesday, October 3, 2012

286

ஓம் சத்குரவே சரணம்
பூன் (Boone) என்பவர் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், சொல்லத் தேவையற்ற எதோ ஒன்றைச் சொல்லிக் கேள்வி கேட்டவரை மிக இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளி விட்டார். பூனின் குற்றத்தைக் களைய அவருக்கு அறிவுரை வழங்கப்பட்ட போது, தான் செய்தது சரி தான் என்றும், தான் ஒரு நேர்மைவாதி என்றும், தான் கூறியது உண்மையை மட்டுமே என்றும் வாதிட்டார்.

இந்த விஷயம் பற்றி, பின்னர், குருதேவர் கேள்விப்பட்ட போது அவர் ஒரு கற்பனை உரையாடலுடன் தொடங்கி அவருடைய கருத்தைக் கூறினார், "ஒருவன் பைபிள், பகவத் கீதை, மற்றும் உலகிலுள்ள உன்னத ஆகமங்களை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம், 'நான் சொல்லப் போகும் ஒரு விஷயத்தை நீ யாரிடமும் கூறக்கூடாது என்று இப்புனித நூல்களின் மேல் சத்தியம் செய்து கொடு' என்று கேட்கிறான். நானும், பொதுவான நம்பிக்கை பேரில், அவனிடம் 'சரி' என ஒப்புக் கொண்டு நான் சத்தியம் செய்து தந்து விடுகிறேன். அதற்குப் பின்னர், அவன் என்னிடம், 'நான் ஒரு விஷப் பாம்பை ம______ என்பவர் படுக்கையில் போட்டுள்ளேன்' என்று கூறுகிறான்.
"அப்பொழுது நான் செய்ய வேண்டியது என்ன? ஒன்று நான் சத்தியத்தை முன்கூட்டியே செய்யாமல் இருந்திருக்க வேண்டும்; அப்படித் தவறிச் செய்து விட்டமையால், நான் மேலும், 'ஓ, நான் பிறரிடம் கூறாமலிருக்கச் சத்தியம் செய்து தந்துள்ளேன்; ஆதலால், நான் இவ்விஷமத்தை யாரிடமும் சொல்லக்கூடாது' என்று எண்ணி நான் செய்த தவறை அதிகப் படுத்துவேனா? இந்த தர்ம சங்கடத்தில் எது பெரிய குற்றம்: நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதா? அல்லது மீறாமல், நான் காப்பாற்ற இயலும் போது காக்காமல், ம______ என்பவரைச் சாக விடுவதா? இந்நிலையில், நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி, அவ்விஷமத்தை பிறரிடம் கூறி ம______வைக் காப்பாற்ற முயல்வதே, நான் செய்ய வேண்டிய சரியான, உறுதியான செயல்.
"கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! அந்தப் பையன் தான் ஒரு உண்மை விளம்பி என்று சொல்லிக் கொண்டு பெரும் தீவினைகளைச் செய்து விட்டு அவற்றை நியாயப் படுத்தினால் எவ்வளவு விபரீதத்திற்குக் கொண்டு செல்லும்.
"உண்மை எப்போதும் நன்மையையே விளைவிக்கும். பூன் சொன்னது உண்மையல்ல; ஏனெனில் அதன் விளைவு தீமையில் முடிந்தது. பூன் கூறியது வெறுமனே (கால தேசத்தால்) வரையறுக்கப் பட்ட ஒரு தகவல் (fact) மட்டுமே; அது முழுமையான உண்மையல்ல. அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலே கூறியிருக்கத் தேவையில்லை! ஒன்றும் சொல்லாமலே விட்டிருந்தாலும் மிக உத்தமம். பேசித் தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால், (தெளிவாகப் பேசி மற்றவரைத் துன்புறுத்துவதை விட) சிலேடையாக, குழப்பமாகப் பதிலளிப்பதே மேல்!"

#‎Conversations‬ with Yogananda 286 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment